April 17, 2017 தண்டோரா குழு
நாளை அனல் காற்று வீசும் வாய்ப்புகள் இருப்பதால், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு வெயில் வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இன்று அதிகபட்சமாக திருத்தணியில் 111 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும், சென்னையில் 108 டிகிரியும் வெயில் பதிவானது.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும். விழுப்புரம், நாகை , திருச்சி, சென்னை உட்பட தமிழகத்தின் 18 மாவட்டங்களில் தீவிர அனல் காற்று வீசும். ஆகையால் மக்கள் குறிப்பாக பகல் 12 முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும், பள்ளிகளில் வகுப்புகளை திறந்த வெளியில் நடத்துவதை தவிர்க்க வேண்டும். ” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, அனல் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள 18 மாவட்ட ஆட்சியர்களுக்கு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.