May 18, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் நாளை காலை பத்தாம் வகுப்புப் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. நாளை வெளியாகும் முடிவுகளை www.tnresults.ni.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
இந்த தேர்வு முடிவுகள் நாளை காலை பத்து மணிக்கு வெளியாக உள்ளன. தேர்வு முடிவுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளவும், மாணவர்களின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் 25.5.2017 முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை முதல் திங்கட்கிழமைமாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் மூலமாகவும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.