May 15, 2022 தண்டோரா குழு
நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் அதிநவீன மருத்துவ ஆய்வகத்தை கோவை டாடாபாத் பகுதியில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் குமார் திறந்து வைத்தார்.
இந்தியாவின் முன்னணி நான்கு பரிசோதனை நிறுவனங்களில் ஒன்றாக நியூபெர்க் டயாக்னாஸ்டிக்ஸ் திகழ்கிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 150 கிளைகளையும் 2000-க்கும் மேற்பட்ட தொடர்பு மையங்களையும் கொண்டுள்ளது.
விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில், கோவை டாடாபாத் பகுதியில் ஒரு ஆய்வகத்தை துவங்கியுள்ளது.
இந்த மையத்தை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் திறந்து வைத்தார். விழாவில், நியூபெர்க் டயக்னஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு, தலைமை செயல் அலுவலர் ஐஸ்வர்யா வாசுதேவன், தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தலைமை நுண்ணுயிர் நிபுணர் டாக்டர் சரண்யா நாராயண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தில், பரிசோதனைக்கு தேவையான அனைத்து கருவிகளும் உள்ளன. நாள் ஒன்றுக்கு 1000 மாதிரிகளை பரிசோதனை செய்ய முடியும். பரிசோதனையின் தன்மையை பொறுத்து தரமான பரிசோதனை முடிவுகள் கிடைக்கும். இந்த மருத்துவ பரிசோதனை ஆய்வகம் ஊட்டி, ஈரோடு மற்றும் உமன் சென்டர் மதர்உட் ஆகிய இடங்களில் கானோலி காட்சி மூலம் துவங்கப்படவுள்ளது.
ஆய்வகத்தை துவக்கி வைத்து கோயம்புத்தூர் மாநகர மேயர் கல்பனா பேசுகையில்,
“இந்த பகுதியில் இந்த ஆய்வகத்துவக்கம், இப்பகுதி மக்களுக்கு உயர்தரமான மருத்துவ பரிசோதனைகள், உடல்நல பரிசோதனைகள் நியாயமான கட்டணத்தில் கிடைக்கும். நலமான வாழ்க்கைக்கு, மக்களுக்கு சிறப்பான, வசதியான மருத்துவ வசதிகள் உதவும். மருத்துவமனைகளுக்கு இணையான அதிநவீன பரிசோதனை ஆய்வகம், தனி மனிதனின் சிகிச்சைக்கு தவிர்க்க முடியாததாகி வருகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க, ஆய்வகங்களின் முடிவு மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும். அனைத்து வகைகளிலும் ஆய்வகங்களின் இயக்கம் நம்பகத்தன்மை கொண்டதாகவும், மருத்துவனைக்கு முடிவுகளை சரியான சமயத்தில் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும். அரசும் வேலை வாய்ப்பு தரும் தொழில் முனைவோர் சூழலை இந்தபகுதியில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் கவனம் செலுத்தி வருகிறது,” நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸின் இந்த துவக்கம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
நியூபெர்க் டயக்னஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு பேசுகையில்,
“இந்த ஆய்வகம், கிருமிகள், நுண்ணுயிரிகள் மற்றும் மூலக்கூறுகளை பரிசோதனை செய்யும் அதிநவீன கருவிகள் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. மருத்துவர்கள் சிகிச்சையை துல்லியமாக மேற்கொள்ளவும், அதற்கேற்ற பாதுகாப்பான சிகிச்சை அளிக்கவும், தரமான வாழ்க்கையை ஏற்படுத்தவும் உயர்தரான பரிசோதனைகள் இந்த ஆய்வகத்தில் உள்ளன. தரமான பரிசோதனை முடிவுகளுக்கு ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு கோவையில் இந்த மையத்தை துவக்கியுள்ளோம். பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் விரிவாக்கப்பட்ட பல்வேறு புதிய வகை பரிசோதனைகளையும் மேற்கொண்டு பயன்பெறலாம். ஒட்டுமொத்த நல பரிசோதனைகளையும் செய்து கொள்ளலாம்,” என்றார்.
நியூபெர்க் டயக்னஸ்டிக்ஸ் குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் ஐஸ்வர்யா வாசுதேவன் பேசுகையில்,
“இப்புதிய ஆய்வகத்தால், கோவை மக்களுக்கும் அதை சுற்றியுள்ள நீலகிரி, ஈரோடு, திருப்பூர் பகுதிகளுக்கும் தரமான, அதிநவீன பரிசோதனைகளை வழங்கும் பொறுப்பினை பெற்றுள்ளோம். விரைவில், இப்பகுதிகளில் 10 ஆய்வகங்களும் 100 மாதிரி சேகரிப்பு நிலையங்களையும் உருவாக்கவுள்ளோம். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், இரண்டாம், 3ம் நிலை நகரங்களில் உயர்தர மருத்துவ சேவைகளின் தேவை அதிகமாக உள்ளது. சுகாதார சூழ்நிலையில் உள்ள குறைபாடுள்ள நிலையை மாற்றுவதை நியூபெர்க் ஆய்வகம் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது,” என்றார்.
விழாவில் திமுக கழக தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் டாக்டர். ஆர்.மகேந்திரன் கலந்து கொண்டார்.