April 9, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தது 5 சதவீதம் பணியிடங்களை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கோவை தொழிலாளர் உதவி ஆணையர்( அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
கோவை மாவட்டத்தில் 20 மற்றும் அதற்கு மேல் பணியாளர்களை பணியமர்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும்,மாற்றுத்திறனாளிகளுக்கு சமவேலை வாய்ப்பு கொள்கைகளை, மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2015 பிரிவு 21 இன் படி நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்களுக்கான பணியிடங்களைக் கண்டறிந்து குறைந்தது 5 சதவீதம் பணி வாய்ப்பு வழங்கிட வேண்டும்.
20 நபர்களுக்கு மேல் பணியாளர்களைப் பணியமர்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவரங்களை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இணையத்தில் உள்ள கூகுள் சீட் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். உணவு, கடைகள், நிறுவனங்கள்,கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் அதிக மாற்றுத்திறனாளிகளை பணி நியமனம் செய்வதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, இருக்கை வசதி, வாகன நிறுத்துமிடம் செய்து தர வேண்டும்.
அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கும் நிறுவனத்துக்கு, மாவட்ட ஆட்சியர் மூலம் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.