October 7, 2016 தண்டோரா குழு
கோவையில் முன்னறிவிப்பின்றி நிறுவனத்தை மூடியது மட்டுமல்லாமல், ஊழியர்களுக்கு ஊதியம் தராமலும், நிறுவன வளர்ச்சிக்காக ஊழியரிடமே கடனாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கோவை மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
கோவை பொள்ளாச்சி சாலை பகுதியில் ஈச்சனாரி அருகே ஏக்செல்லார் என்ற தனியார் மென்பொருள் நிறுவனத்தை நவீன் என்பவர் நடத்தி வந்தார். இந்நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி கடந்த ஆகஸ்ட் மாதம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி நிறுவனத்தை மூடி உள்ளார்.
மேலும், அங்கு பணியாற்றி வந்த 40க்கும் மேற்பட்ட பணியார்களுக்கு இரண்டு மாத ஊதியமும் வழங்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதே போல் நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்த முதலீடு செய்து உதவ வேண்டும் என நிறுவனத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் முதலீடு செய்யமாறும் அதற்கு இரண்டு சதவீத வட்டியும் தருவாக கூறி அழைப்பு விடுத்துள்ளார்.
இதை நம்பி நிறுவனத்திடம் 45 லட்சம் ரூபாய் வரை பணத்தையும் சிலர் கொடுத்துள்ளார்கள். ஆனால் எந்த அறிவிப்பின்றி மூடியதுடன் வாங்கிய கடனை கொடுக்காமலும் பணியாற்றியவர்களுக்கு ஊதியமும் வழங்காமல் சட்டப் படி பார்த்துக்கொள்வதாக கூறி அலைகழித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜிடம் புகார் அளித்துள்ளனர். உடனடியாக கடனாக வாங்கிய பணத்தையும், ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தை பெற்று தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பிரேம் என்பவர் கூறுகையில்..
நிறுவனத்தின் வளர்ச்சிக்காக என்னிடம் ரூபாய் 10 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டனர். அதற்கான வட்டி தொகையும், சம்பளமும் இரு மாதங்களாக தரவில்லை .திடீரென நிறுவனத்தை மூடிவிட்டனர். பணத்தை கேட்டபோது தரமுடியாது என மிரட்டுகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு ஊழியர்களின் வாழ்வை காக்க வேண்டும் என தெரிவித்தார்.