August 16, 2017
தண்டோரா குழு
நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சிலிங் விதிப்படி, எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
இதற்கிடையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களை தேர்வு செய்ய ஓராண்டுக்கு மட்டும் தமிழக அரசு விதிவிலக்கு அளிக்கும் அவசர சட்டம் இயற்றப்பட்டால் அதை மத்திய அரசு பரிசீலிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு பெற வழிவகை செய்யும் அவசர சட்ட முன்வரைவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு இயற்றிய அவசர சட்ட மசோதாவை நேற்று முன் தினம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பித்திருந்தார். இதை ஏற்று, இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்க மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சட்ட வரைவுக்கு சுகாதாரத்துறை, உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்bஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.