March 24, 2017
தண்டோரா குழு
நீட் மருத்துவ பொது தேர்விற்கு தமிழகத்திற்கு தற்போதைய சூழ்நிலையில் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நாடு முழுவதும் ‘நீட்’ எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிகாரிகள் தில்லி சென்று மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, தற்போதைய சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க முடியாது. தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்டஅமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் நட்டா விஜயபாஸ்கரிடம் கூறினார்.