September 9, 2017 தண்டோரா குழு
சென்னை நுங்கம்பாக்கத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவிகள் 3 மணி நேரத்துக்கு மேல் போராட்டம் நடத்தினர்.
நீட் தேர்வுக்கு விவகாரத்தில் அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் சாலையில் அமர்ந்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். சுமார் 2 மணி நேரம் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பிறகு 1 மணி நேரத்துக்கு மேல் பள்ளி வளாகத்துக்குள் போராட்டம் நடத்திய வந்தனர்.
மேலும், நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று மாணவிகள் கூறியுள்ளனர். மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளி வளாகத்துக்குள் குவிந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவியது.இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் சென்னை மாநகராட்சி கல்வி அலுவர்லர் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது நடவடிக்கை இருக்காது என்று கல்வி அதிகாரி உறுதி அளித்துள்ளார். கல்வி அதிகாரி உறுதியை ஏற்று மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
மாணவிகள் போராட்டத்தில் நுங்கம்பாக்கத்தில் 3 மணி நேரமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.