January 10, 2017 தண்டோரா குழு
இந்தியா முழுவதும் சமச்சீர் கல்விக் கொள்கை இல்லாததால் தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்தது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர “நீட்” நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் 2016 ஆம் ஆண்டில் அனுமதி அளித்தது. இந்த நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவத்தில் இளம் மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கையில் பாதிப்பு ஏற்படும்.
நாட்டின் முழுவதும் மாணவர்கள் மத்திய செகண்டரி கல்வி வாரிய (CBSE), செகண்டரி கல்விக்கான இந்திய சான்றிதழ் (ICSE), மாநில பாடத் திட்டம், மெட்ரிக் பாடத் திட்டம் போன்ற பல்வேறு பாடத் திட்டங்களில் பயில்கின்றனர். ஆனால், நீட் தேர்வில் சிபிஎஸ்இ, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ஆகிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டிருக்கும். இதனால், பெருமளவு பாதிக்கப்படுவது பெரும்பான்மையான மற்ற மாணவ, மாணவிகள்தான்.
இதனால், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத சூழல் ஏற்படும். இத்தேர்வு முறையினால் பல மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான இடங்களில் முழுமையாக சேர்க்கை நடைபெறாமல் இருக்கின்றன.
எனவே, பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மருத்துவப் படிப்புக்கு மீண்டும் ஒரு தேர்வு முறை என்பது ஏற்புடையதல்ல. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சமச்சீர் கல்விக்கொள்கை இல்லாததால் இந்த நீட் தேர்வு முறையை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டார்.