July 25, 2017 தண்டோரா குழு
‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,
“மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்க்க நடைபெறும் ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளேன். ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாகை, கடலூர் மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலங்களாக அறிவிக்கும் திட்டம் பல ஆண்டுகளாக உள்ளது. 17 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த திட்டம் உள்ளது.
கதிராமங்கலத்தில் எண்ணை கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழாய்களை செப்பனிடும் பணி செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்துகின்றனர்.
ஹைட்ரோகார்பன் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம்.”
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.