March 31, 2017 தண்டோரா குழு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய கர்ணன், கோல்கட்டா உயர் நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டார். இதனிடையே அவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக புகார் கூறி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பினார்.
நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் அவர் நடந்து கொண்டதாக கூறி நீதிபதி கர்ணன் மீது, உச்ச நீதிமன்றம் தானாகவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் ஆஜராக உத்தரவிட்டும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வு முன்பு ஆஜரானார்.