January 17, 2017 அனீஸ்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள, பழங்குடியின மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதி முழுமையாக ஏமாற்றப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதியைக் தொண்டு நிறுவனங்களும், மாவட்ட நிர்வாகமும் குறைத்து கொடுப்பதாக கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், இருளர், தோடர், பனியர், காட்டு நாயக்கர், குறும்பர் என ஆறு இனங்களை சேர்ந்த பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள், நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பல பகுதிகளில் கால காலமாக வசித்து வருகின்றனர்.
இவர்கள், காடு மற்றும் காடுகளில் உள்ள பொருட்களைச் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள், காட்டில் கிடைக்கும் தேன், மூங்கில், கோரைப் புல் உள்ளிட்ட பல வகையான பொருட்களை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களின் வாழ்வாதாரங்களில் காலம் காலமாக எந்தவித முன்னேற்றமின்றி இருப்பதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, மாநில அரசு மற்றும் வெளிநாடு தொண்டு நிறுவனங்கள் சார்பாக பல்வேறு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதியுதவி முழுவதுமாக இவர்களுக்குச் சென்றடைவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல கோடி ரூபாய் நிதியுதவி கிடைத்தும் குறிப்பிடும் படியாக இருளர், பனியர், காட்டு நாயக்கர், குறும்பர் என நான்கு பழங்குடியின மக்கள் வாழ்வில் எந்தவித முன்னேற்றமும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை, அடையாளம் காட்டி நீலகிரி மாவட்டம் மற்றும் கோவையில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பணம் சம்பாதித்து வருவதாகவும், வனங்களுக்குள் இவர்களுக்கு சென்று வர சுதந்திரம் இருந்த போதும், சில வனத்துறை அதிகாரிகளால் இவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. வன உரிமை சட்டம் 2016ன் படி, அரசு இவர்களுக்குப் பல்வேறு சலுகைகள் அறிவித்திருந்தும் அது முழுமையாக கிடைக்கவில்லை. இவர்களுக்கு, அளிக்கப்பட்ட நிலங்கள் தனி நபராலும், பெரிய நிறுவனங்களாலும் அபகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைப் பற்றி முன்னாள் ஆதிவாசி நலசங்க செயலாளர் கே.வீரப்பன் கூறியதாவது:
வெளிநாடுகளிலிருந்து, தொண்டு நிறுவனங்கள் மூலம் பல கோடிக்கணக்கான நிதி ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நிதி அதிகளவுக்கு இருப்பதால் இதை பழங்குடியின மக்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிவதில்லை. இதை, தனியார் தொண்டு நிறுவனங்கள் சரிவர மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில்லை. இவர்களுக்கு நிதி அளிப்பதை தவிர்த்து இவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் விதமாக அவர், அவர்களின் பரம்பரைத் தொழிலை வளர்ப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இவர்களுக்கு, கிடைத்து வரும் நிதியுதவி ஒரே குடும்பத்தில் உள்ள மூன்று நபர்களுக்கு கடனாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால், 20 சதவீதம் பழங்குடியின மக்கள் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அனைத்து பழங்குடியின மற்றும் ஆதிவாசி மக்களுக்கு நிதியுதவி முழுவதுமாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இவர்களின் நிலங்களைக் கையகப்படுத்தியுள்ள தனி நபர்களும் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்க்கொண்டு இவர்களின் நிலங்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள, ஆறு பழங்குடியினர்களில் இரு பழங்குடியினரை தவிர மற்ற நான்கு பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இன்றி வாழ்ந்து வருவது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது.