May 2, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நீலகிரி உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் இன்று கூடுதல் தலைமை செயலாளரும் கூட்டுறவு துறையின் செயலாளருமான ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
உலக அளவில் சிறுதானிய ஆண்டு என அறிவிக்கபட்டுள்ள நிலையில், அது குறித்த விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது.விழிப்புணர்வுக்காக நீலகிரி, தர்மபுரி மாவட்டத்தில் நாளை முதல் இலவசமாக சிறுதானியங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
கேழ்வரகு உற்பத்தியை பெருக்கி தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். கம்பு உள்ளிட்ட சிறுதானிய தேவைகளை உணர்ந்து அதற்கு தற்போது வரவேற்பு அதிகரித்து வருவதால், அதன் உற்பத்தியையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
மேலும் கூட்டுறவு சங்கத்தின் மூலம் புதிய வேளாண் கடன்கள் ரூ.14,000 கோடியாக உயர்த்த பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களும் இந்த சங்கத்தின் மூலம் பயனடையும் வகையில் உறுப்பினர்களுக்கு வீட்டுமனை கடன் உள்ளிட்ட 17 கடன் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தை ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.