August 6, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் நுண்ணீர்ப்பாசன திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு தேவையான ஆவணங்களை வழங்கிட நாளை முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் சுமார் 2 ஆயிரத்து 155 ஹெக்டர் விவசாய நிலங்களுக்கு மானியம் வழங்கிட இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு விவசாயிகள் இணையதளத்தில் தங்கள் நில உடமை ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.
இணையத்தில் பதிவு செய்திட இத்திட்டத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான ஆவணங்களான சிட்டா, அடங்கல் மற்றும் இணைய வழி சிறு,குறு விவசாயி சான்று ஆகியவற்றை வழங்கிடும் பொருட்டு வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை துறை ஆகியோர் ஒருங்கிணைந்து நாளை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் முகாம் நடைபெறவுள்ளது.
மேலும் இணையவழியில் சான்றுகள் தேவைப்படும் சிறு,குறு விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையங்களில் முன்பே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாய்ப்பினை அனைத்து விவசாய பெருமக்களும் பயன்படுத்தி நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன் அடைய கேட்டுக்கொள்ளபடுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.