January 3, 2017 தண்டோரா குழு
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக இடையூறாக உள்ள மரங்களை வெட்ட பொது ஏலம் விடாமல் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து, கோவை மாவட்ட மர வியாபாரிகள் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை – பொள்ளாச்சி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விரிவாக்கப் பணிக்காக சாலை ஓரங்களில் இடையூறாக உள்ள மரங்கள் வெட்டப்பட்டன.
அதே போல் கோவை ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி ஆச்சிபட்டி வரை உள்ள சுமார் 1714, அரச மரம், ஆலமரம், புளியமரம், வாகை மரங்கள் போன்றவற்றையும் வெட்ட வேண்டிய சூழல் உள்ளதால் அவற்றின் மதிப்பை வனத்துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்ட பின் பொது ஏலத்தில் விடப்படும் என கோவை மாவட்ட மர வியாபாரிகள் எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு மரம் வெட்டுவதற்கான டெண்டர் ஏற்கனவே கொடுக்கப்பட்டதாகk் கூறப்படுகிறது. இந்த மரம் வெட்டும் பணியைப் பொதுஏலத்தில் விட்டால் ஒரு கோடி ரூபாய் வரை ஏலம் போகும். ஆனால், தனியார் நிறுவனத்திற்கு ஏலம் விட்டதன் மூலம் அரசிற்கு ரூ. 75 லட்சம் வரை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கோவை மாவட்ட மர வியாபாரிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மட்டும் மர வியாபாரத்தை நம்பி 250க்கும் மேற்பட்ட மர வியாபாரிகள் உள்ளனர். பொது ஏலம் விடாமல் தனியாருக்கு இந்தப் பணியை வழங்குவதால், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, அதைக் கண்டித்து கோவை திருச்சி சாலை கோத்தாரி லேஅவுட் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோவை மாவட்ட மர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகம் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர்.