April 18, 2016 தண்டோரா குழு
இன்று உலகம் முழுவதும் மர்மமாய் இருக்கும் விசயங்களில் ஒன்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் மரணம். உலக அளவில் பேசப்படும் வீரர்களில் நேதாஜியும் ஒருவர்.
அவரது மரணம் குறித்த சர்ச்சைகளும் அவருக்கு இந்தியாவின் முக்கிய தலைவர்கள் இளைத்த துரோகம் குறித்த வதந்திகளும் தற்போதுதான் அடங்கியுள்ளன. இந்நிலையில் மீண்டும் அவரது பெயர் உச்சரிக்கப்பட்டு வருவதற்குக் காரணம் அவரது டிரைவர் தான்.
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் டிரைவராக இருந்தவர் கர்னல் நிஜாமுதீன்.
இவர் அண்மையில் தனக்கு வங்கி கணக்கு துவங்குவதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தனது ஆதாரங்களைக் கொடுத்துள்ளார், அப்போது, தான் தெரியவந்தது, உலகில் வயதான நபர் இவர்தான் என்பது.
19௦௦ம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 116 வயது 3 மாதங்கள் 14 நாட்கள் ஆகிறது. இதற்கு முன்னர் ஜப்பானைச் சேர்ந்தவர் தான் உலகின் மிகவும் வயதான மனிதராக இருந்தார். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் அவர் இறந்துவிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு வங்கி கணக்கு துவங்க அவருடைய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். அதனை வைத்துத் தான் இவருக்கு 116 வயதாகியுள்ளது என்பதும், உலகில் அதிக வயதான நபர் என்பதும் தெரியவந்தது.
மேலும், இவரது மனைவி அஜ்ஜூ புனிஷவிற்கு வயது தற்போது 1௦7 ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.