February 7, 2017 தண்டோரா குழு
இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாகன ஓட்டுநர் கர்னல் நிஜாமுதீன் 115 வயதில் திங்கள்கிழமை (பிப்ரவரி 6) காலமானார்.
19௦1ம் ஆண்டு பிறந்த நிஜாமுதீன், இந்திய சுதந்திர போராட்ட நேதாஜி வீரர் சுபாஷ் சந்திர போஸின் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆஸம்கர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலமானார். அவர் 1943 முதல் 1945 வரையில் நேதாஜியுடன் இருந்தார்.
நிஜாமுதீனுக்கு மனைவி அஜ்புல் நிஷா, மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
நிஜாமுதீன் மறைவு குறித்து பிரதமர் தன்னுடைய இரங்கல் செய்தியில், “நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாகன ஓட்டுநராக இருந்த கர்னல் நிஜாமுதீன், இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வலிமை சேர்த்தார். அவர் தேசத்தின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த சிந்தனை, வீரம், தேசப்பற்று எப்பொழுதும் நம் நினைவில் இருக்கும். அவருடைய இறப்பு மிகுந்த துக்கத்தைத் தருகிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.