February 14, 2017 தண்டோரா குழு
பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல தொற்று நோய்கள் பரவாமல் இருக்க கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை இயக்குநர் மரு. குழந்தைசாமி கூறியுள்ளார்.
கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவ, மாணவிகளிடையே தொற்று நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் அவர் கலந்து பேசியதாவது:
“தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறை சீரிய முறையில் செயல்பட்டு வருவதன் காரணமாக பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பன்றிக் காய்ச்சல் நோயின் தாக்கத்தைப் பற்றி அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொளளும் வகையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நம்மைச் சுற்றியிருக்கும் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதுடன் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்வதும் அவசியமாகும். இதனால், கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க முடியும்.
இதுபோன்ற தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்குக் கைகளைச் சுத்தமாக கழுவவேண்டும். காய்ச்சல், தொண்டை வலி போன்ற முதல் கட்ட எச்சரிக்கைகள் வரும்போது, தானாகவே மருந்து உட்கொள்ளாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவில் மருந்துகள் இருப்பில் உள்ளன. இதற்கென மருத்துவ ஆலோசனைகள் இலவசமாகப் பெறுவதற்குக் கட்டணமில்லா தொலைபேசி எண் 104. அதைத் தொடர்புகொண்டு மக்கள் பயன்பெறலாம்.
தட்டமை, ரூபெல்லா தடுப்பூசிகள் பிறந்த 9 மாத குழந்தைகள் முதல் 15 வயதுள்ள குழந்தைகள் அனைவருக்கும் போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசி முகாம்கள் பிப்ரவரி 28-ம் தேதி வரை செயல்படும்“.
இவ்வாறு பொதுசுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுசுகாதாரத் துறை இணை இயக்குநர் பிரேம்குமார், துணை இயக்குநர் பானுமதி, கோவை மாநகராட்சி சுகாதார அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.