April 26, 2016 தண்டோரா குழு.
இன்றைய நிலையில் பெண்கள் எல்லா ஆலயங்களின் உட்பிராகாரத்தினுள்ளும்,எந்தவித ஆடை கட்டுபாடுகளுமின்றியும்,ஆண்களுக்கு நிகராக நுழைய அனுமதிக்க வேண்டும் என்பதே பெண் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
பூமாதா ரன் ராகினி ப்ரிகேட் அமைப்புப் பெண்கள் கிட்டத்தட்ட 350 பேர் குடியரசு தினத்தன்று 400 வருட பாரம்பரிய நம்பிக்கையும் மீறி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகமத் நகரில் இருக்கும் ஷானி ஷின்ஹாபூர் கோயிலின் உட்பிரகாரத்தில் நுழைய முயன்ற செய்தி நாம் அறிந்ததே.பின்பு முதல்வரும் மற்றவர்களும் தலையிட்டு நீதி மன்றத்தை அணுகியதும் தெரிந்ததே.
அடுத்ததாக அவ்வமைப்பின் தலைவர் திப்தி தேசாய், திரயம்பகேஸ்வரர் ஆலயத்தின் உட்பிரகாரத்திற்குள் வணங்க அனுமதி வேண்டியதும்,அவர் வாயிலிலேயே தடுக்கப்பட்டதும் செய்தி.
மேலும் அவர் கோல்காபூர் மஹாலக்ஷ்மி கோயிலில் ,ஆலயத்தின் ஆடை கட்டுப்பாடுகளை அனுசரிக்க மறுத்ததால் தாக்கப்பட்டதும் அறிந்த உண்மை.
இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பாக ,சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதிக்க வேண்டுமாயின் அவர்களின் தூய்மையைப் பரிசோதிக்கும் வகையில் கருவி ஒன்றைப் பொருத்த வேண்டும் என்ற மத ஆர்வலர்களின் கருத்து ,பெண்களிடையே பெருங்கொந்தளிப்பை உருவாக்கியது.
இது பற்றி கேரள முதல்வர் உமன் சாண்டியிடம் கேட்ட போது,தொன்று தொட்டு வரும் மத பழக்க வழக்கங்களிலும்,மத நம்பிக்கைகளிலும்,தான் தலையிட விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
திப்தி தேசாய் அவர்களின் அடுத்த நடவடிக்கை ஹாஜி அலி தர்கா விற்க்குள் ஏப்ரல் 28ம் தேதி நுழைய முயற்சிப்பதாகும்.இதற்கு சிவசேனா உட்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்