September 4, 2021 தண்டோரா குழு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு மீதான ஒரு விழுக்காடு வரி ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதுகுறித்து தென்னிந்திய சிறு குறு நூற்பாலைகள் சங்க (சிஸ்பா) கெளரவ செயலாளர் ஜெகதீஸ் சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவையில் உள்ள தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைகளின் நலன் மற்றும் அவற்றை சார்ந்திருக்கும் தொழிலாளர்களின்நலன் ஆகியவற்றை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதனிடையே ஜவுளி மற்றும் கைத்தறி அமைச்சர் காந்தியை சந்தித்து, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய பருத்தி கழகம் தமிழகத்திலேயே விற்பனையகத்தையும், கிடக்கினையும் துவங்கினால் தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள் பஞ்சு வாங்க வேண்டி ஆந்திரா,தெலுங்கானா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் தவிர்க்கப்படும். போக்குவரத்து செலவும் குறையும். பஞ்சு வாங்கும் விலையில் போட்டியும் தவிர்க்கப்படும். பஞ்சு மீதான வரியை நீக்க வேண்டும் என எங்களது கோரிக்கைகளை விலியுறுத்தினோம்.
இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு மீதான ஒரு விழுக்காடு வரியை ஆதாவது சந்தை கட்டணம் ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த வரலாற்று மிக்க அறிவிப்பை வெளியிட்டதின் பயனாக தமிழக நூற்பாலைகள் பெறும் பயன் அடையும். தமிழக முதலமைச்சருக்கு தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது சிஸ்பா தலைவர் செல்வன், துணை தலைவர் வெங்கடேசன், பொருளாளர் விஜயகுமார், தலைமை மேலாளர் வெங்கடேஷ் பிரபு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு தலைவர் பிரபு தாமோதரன் கூறியிருப்பதாவது:
பஞ்சு மீதான 1 சதவீதம் செஸ் வரியை நீக்கி இருப்பது எங்கள் ஜவுளி உற்பத்தித்துறைக்கு, மிகுந்த பயனளிக்கக் கூடிய அறிவிப்பாகும். நீண்ட கால கோரிக்கையான இந்த விசயத்தில் கவனம் செலுத்தி வரியை நீக்கியதற்கு எங்கள் சங்கம் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். எங்கள் அமைப்பின் மூலம், குழுவாக சேர்ந்து பருத்தி வாங்கும் நடைமுறையை நாங்கள் பின்பற்றுவதால், பிற மாநில ஜின்னிங் உரிமையாளர்களிடம் பேசி, பஞ்சு இருப்பை இங்கே வைப்பதற்கான முயற்ச்சியை எடுக்க முயல்வோம். இதன் மூலம், தமிழக நூற்பாலைத்துறையின் போட்டித்திறன் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.