August 9, 2017 தண்டோரா குழு
தீபாவளிப் பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசுக் கடைகளை நடத்திட உரிமம் பெற வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கூறியுள்ளார்.
கோவை மாவட்ட ஊரகப் பகுதிகளில் தற்காலிகமாக பட்டாசுக் கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள், வெடிபொருள் சட்ட விதிகள், 2008 -இன் கீழ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக பட்டாசு உரிமம் பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பங்களை 31.07.2017 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கத் தக்க வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அதில் விண்ணப்பம் செய்யப்படாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக மனுக்களை பெறவதற்கான வரையறை காலமானது, இறுதியாக 21.08.2017 அன்று மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
“இந்த தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற மனு செய்வதற்கு இதுவே கடைசி வாய்ப்பாகும். எக்காரணத்தை முன்னிட்டும் காலவரையறையானது நீட்டிக்கப்படமாட்டாது.
காலக்கெடுவிற்குப் பின்னால் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிர்வாக காரணங்களினால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது,” என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்தார்.