December 8, 2016 தண்டோரா குழு
பணமில்லா பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், கிரடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் ரூ.2 ஆயிரம் வரை பணப்பரிமாற்றம் செய்யப்படுவதற்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் பணத்தட்டுப்பாடு உள்ளதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஒப்புக் கொண்டு நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். பொருளாதார நிபுணர்கள் கருத்துப்படி மக்களிடமிருந்து திரும்ப பெற்ற நோட்டுகளுக்கான புதிய நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்யும் நடவடிக்கைக்கு சில மாதங்கள் ஆகும் என்று கூறுகின்றனர்.
வியாழனன்று இந்த சேவை வரி விலக்கு அறிவிக்கையை அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே ரூ.2000 வரையிலான ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு பயனாளர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி வியாழகிழமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சகம் வட்டாரங்கள் வியாழக்கிழமை கூறியதாவது:
கிரடிட், டெபிட் கார்டு மூலம் ரூ. 2 ஆயிரம் வரை ஒரே நேரத்தில் பரிமாற்றம் செய்யப்படுவதற்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் அறிவிப்பார்.
ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, பணம் எடுக்க வங்கிகளிலும் ஏ.டி.எம்.,களிலும் பொது மக்கள் நீண்ட வரிசையல் காத்திருக்கின்றனர். டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாற வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில், ரூ.2 ஆயிரம் வரையிலான பணப்பரிமாற்றத்திற்கு சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றனர்.