January 25, 2025 தண்டோரா குழு
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலைய வசிக்கும் பொதுமக்களுக்கு இன்று (24.01.2025) பண்ணை வீடுகள் மற்றும் வீடுகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K. கார்த்திகேயன் கலந்து கொண்டார்.மேலும் இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் அவர்களது கிராம பகுதிகளில் சந்தேகப்படும் படியான புதியவர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் குற்றங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை வீடுகளில் பொருத்தும் படியும் எடுத்து கூறினார்.
மேலும் இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் காவல் உதவி செயலின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். அதாவது காவல் உதவி செயலி மூலம் பொதுமக்களுக்கு காவல் நிலையத்தின் இருப்பிடத்தை அறியும் வசதி, போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் தொலைப்பேசி எண்களை தெரிந்துகொள்ளும் வசதி, ஆன்லைன் பண மோசடி குறித்து புகார் தெரிவிக்கும் வசதி, மற்ற புகார்களை அளிக்கும் வசதி, அவசர கால எச்சரிக்கைகள், தகவல்களைபெறும் வசதி, வாகன விபரங்களை அறிந்துகொள்ளும் வசதி உள்ளன.
அதேபோல் காவல்துறைக்கு செலுத்த வேண்டிய அபராதங்களையும் இந்த செயலியின் மூலமாக பொதுமக்கள் செலுத்தலாம். காணாமல் போன ஆவணங்கள் குறித்து புகார், முதல் தகவல் அறிக்கை (FIR) விபரங்களையும் இச்செயலி மூலமாக பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம். கூகுள் பிளே ஸ்டோரில் Kaaval Uthavi என ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினால் இந்த செயலியை பதிவிறக்க செய்து பயன்படுத்தலாம் என காவல் உதவி செயலியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.