September 20, 2024 தண்டோரா குழு
பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் அரசு அலுவலர்களை மிரட்டியும், வெளிவட்டாரத்தில் மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார்
பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனநாயகத்தைக் பேணிக் காப்பதில் ஊடகம் மற்றும் தொலைக்காட்சிகள் முக்கியப் பங்காற்றுகின்றன.மேலும்,பத்திரிகை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் போற்றப்படுகிறது.பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள்,புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் அரசுக்கும் அரசு அலுவலர்களுக்கும்,மக்களுக்கும் பாலமாக செயல்பட்டு சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மக்களுக்கு பயனளிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இத்தகைய பொறுப்புமிக்க பணியினை ஆற்றிவரும் பத்திரிகையாளர்கள் மத்தியில், பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடி செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமில்லாமல் காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் எச்சரித்துள்ளார்.
மேலும்,கோயம்புத்தூர் மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் அரசு அதிகாரிகளை மிரட்டுவதும், அவர்களை பற்றி அவதுாறு செய்திகளை வெளியீடு செய்கின்றனர். மேலும் தங்களுக்கு உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் என்றும், அவர்களிடம் சொல்லி உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுக்கிறேன் என்று மனுக்களை பெற்றுக்கொள்கின்றனர். அதோடு ஏமாற்று வார்த்தைகளை சொல்லி பணத்தையும் பறித்துக்கொள்வதாக ஏராளமான புகார்கள் வருகின்றன.
அதோடு அரசு அலுவலர்களை மிரட்டுதல், காவல் நிலையங்களில் சமரசம் என்ற பெயரில் கட்டபஞ்சாயத்து புகார்கள். ஏராளமாய் வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் முன்பாக பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி, மக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டுவருவது தெரியவருகிறது.
அந்நபர்கள் போலீசாரால் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி கண்டறியப்படும் போது அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பத்திரிகையாளர்கள் அரசுத் துறை அலுவலர்களை மிரட்டினால்,
சம்மந்தப்பட்ட அலுவலர் உடனடியாக பத்திரிகையாளர்களின் புறம்பான செயலுக்கு அரசு அதிகாரிகள் துணை போகக்கூடாது.
பத்திரிகையாளர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக 9498042423 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல்களை அனுப்பினால், அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.