December 10, 2016
தண்டோரா குழு
தலைநகர் புதுதில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பனிமூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல நகரங்களில் விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வடமாநிலங்களில் சாலைகளில் பனி சூழ்துள்ளதால் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். பனியைச் சமாளிக்க மக்கள் தீமூட்டி குளிர் காய்கின்றனர்.
தில்லியில் பனிமூட்டத்தால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 1௦) 6 சர்வதேச மற்றும் 13 உள்நாட்டு விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதம் ஆனது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் பாதைகளைப் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் தில்லியில் 101 ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகியுள்ளது. 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 10 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்தி்ற்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே வடமாநிலங்களில் பனிமூட்டம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியுள்ளனர்.