April 20, 2017 தண்டோரா குழு
சேலம் – நாமக்கல் – கரூர் இடையே செயல்பட்டு வரும் சிறப்பு பயணிகள் ரயிலில் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்வதால் இந்த ரயில் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது என தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலம் – நாமக்கல் – கரூர் வழித்தடத்தில் தினமும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று 16.09.2015 முதல் இந்த வழித்தடத்தில் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தால் தினமும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த ரயில்களில் பயணிக்கும் சராசரி பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதாவது 13 முதல் 21 சதவீதம் மட்டுமே உள்ளது என ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது போன்ற சிறப்பு பயணிகள் ரயில் இயக்கும் போது போதுமான பயணிகள் எண்ணிக்கை இருந்தால் மட்டுமே இந்த ரயில் சேவை தொடர இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டால் பயணிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாவார்கள்.
இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் நிர்வாகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் “
பயணிகள் இந்த ரயிலை பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருந்தால், இந்த சிறப்பு பயணிகள் ரயில் சேவைவை ரத்து செய்வதை தவிர ரயில்வே நிர்வாகத்திற்கு வேறு வழியில்லை,” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.