January 17, 2017 தண்டோரா குழு
நீலகிரியில் தரமான சாலைகள் அமைக்கும் நோக்கில், சுமார் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நவீன தார்க் கலவை இயந்திரம் பல வருடங்களாக இயங்காமல் பயன்பாடற்று கிடக்கிறது.
நீலகிரியில் புதிதாகப் போடப்படும் தார்ச் சாலையின் ஆயுட் காலம் 5 ஆண்டுகள். நீலகிரியில் போடப்படும் தார்ச் சாலைகள் ஓரிரு ஆண்டுகளில் குண்டு, குழியாக மாறி, பல்லாங்குழி சாலைகளாகி விடுகின்றன. மழை, வெயில், பனி என மாறி, மாறி நிலவும் கால நிலையில், மலை மாவட்ட சாலைகள் அடிக்கடி பழுதாவது வாடிக்கையாகிவிட்டது.
இதைக் கருத்தில் கொண்டு நீலகிரியில் தரமான சாலைகளை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் அப்போதைய மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர். பாலுவின் முயற்சியில், சுமார் 2 கோடி ரூபாய் செலவில், ஊட்டி – குன்னூர் சாலை வேலி வியூ பகுதியில் நவீன தார்க் கலவை இயந்திர யூனிட் அமைக்கப்பட்டது.
முற்றிலும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த இயந்திரத்தில் தரமான சாலை அமைப்பதற்குத் தேவையான தார், ஜல்லி கலவையை இயந்திரம் கலவை செய்யும் வகையில் கம்ப்யூட்டரில் புரோக்ராம் செய்யப்பட்டிருக்கும். குறிப்பிட்ட விகிதத்திற்கு, குறைவாகத் தார்க் கலவையைத் தயாரிக்க முடியாது. “இயந்திர தார்க் கலவையைப் பயன்படுத்தி அமைக்கப்படும் சாலையின் ஆயுட் காலம் குறைந்தது ஐந்தாண்டுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
சில இடங்களில் இயந்திர தார்க் கலவை மூலம் சாலைப் பணிகள் நடைபெற்றன. நெடுஞ்சாலை மட்டுமின்றி உள்ளாட்சி சாலைகளையும் இயந்திர தார்க் கலவை மூலம் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டது. இயந்திர தார்க் கலவை மூலம் சாலை அமைக்கும் போது, டெண்டர் தொகையில் 90 சதவீதத்தைச் சாலைப் பணிக்கென செலவழிக்க வேண்டியிருந்ததால், அதிகாரிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் செல்ல வேண்டிய கமிஷன் கொடுக்கப்படுவது தடைப்பட்டது.
எனவே, அதிகாரிகள், அரசியல்வாதிகளுடன் இணைந்து “ஒப்பந்ததாரர்கள் இயந்திரத்தில் தார்க் கலவை செய்யும்போது, அதிலிருந்து வெளியேறும் புகை, சுற்றுச் சூழலை மாசுப்படுத்துகிறது” என்ற புகாரைக் கிளப்பி, இயந்திரத்தின் செயல்பாட்டை நிறுத்தினர்.
இந்நிலையில், தற்போது தார்க் கலவை இயந்திரம் கடந்த மூன்றாண்டாக மூடிக்கிடப்பதால், விலையுயர்ந்த இயந்திரம் பழுதாகி, அரசாங்கத்தின் பல கோடி ரூபாய் விரயமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைப் பற்றி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் ஜி. முருகன் கூறியதாவது:
“தற்போதுள்ள நிலவரப்படி ஒப்பந்ததாரர்களே இதைப் போன்ற கலவை இயந்திரத்தை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. எனவே, சாலைகள் அமைக்கும்போது அவர்களின் இயந்திரங்கள் மூலமாகவே, தார்க் கலவை பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள இயந்திரத்தில் கலவைகள் தயாரிக்கும் பணி இன்னும் சிறிது நாட்களில் தொடங்கிவிடும் என்றும், பெரும்பாலும் நாங்கள் வைத்திருக்கும் இயந்திரத்தின் மூலம் தயாரிக்கப்படும் கலவைகள் சாலைகளைச் சீரமைக்கும் பணிக்கு மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்”இவ்வாறு அவர் கூறினார்.
சுடுகலவை இயந்திரத்தின் செயல்பாட்டை விரைவில் தொடங்கி, இயந்திர தார்க் கலவை மூலம் நெடுஞ்சாலை புதுப்பிப்புப் பணி மட்டுமல்லாமல், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சாலைகளைப் புதுப்பிக்கும் பணியையும் மேற்கொண்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.