April 18, 2017
தண்டோரா குழு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் அலுவலகத்தில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் தலைமையில் இன்று பரம்பிக்குளம் சட்டம் ஒழுங்கு குறித்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் பரம்பிக்குளம் மாவட்ட வனஅலுவலர் ,பொள்ளாச்சி மாவட்ட வனஅலுவலர்,பரம்பிக்குளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் , வால்பாறை கண்காணிப்பாளர் , செயற்பொறியாளர், பரம்பிக்குளம் பொதுப்பணித்துறை,பொள்ளாச்சி வட்டாட்சியர்,டாப்சிலிப் வன அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சமாதான கூட்டத்தில், தமிழகப்பொதுப்பணித்துறை அலுவலர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையினை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன் பின் இரு மாநிலங்களுக்கிடையே அமைதி மற்றும் நல்லுறவு ஏற்பட அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு நல்குவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.