January 4, 2022 தண்டோரா குழு
கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி காரணமாக கோவையில் கோழி இறைச்சி விலை 20 சதவீதம் வரை குறைந்தது.
கேரளாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேரளாவில் இருந்து வரும் வாத்துகள், கோழி தீவினங்கள், கோழிகள் ஆகியவற்றை தமிழகத்திற்கு கொண்டுவரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, மாநில எல்லை பகுதிகளில் சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கோவை மாவட்டத்தில் கோழி இறைச்சியின் விலை குறைந்துள்ளது. இதனால், வியாபாரிகள் பெருமளவில் நஷ்டம் அடைவார்கள் என கோழி இறைச்சி மற்றும் கோழி பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோழி பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சல் நோய் வந்தது இல்லை. தமிழகத்தில் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் கேரளாவிற்கு மாதந்தோறும் சராசரியாக 2 கோடி கிலோ கறிக்கோழிகள் அனுப்பப்படுகின்றன. பறவை காய்ச்சல் எதிரொலியாக இது தற்போது தேக்கம் அடைந்து வருகிறது. இதனால், கோவையில் கோழி இறைச்சி விலை 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.
பறவை காய்ச்சல் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை. கோழி இறைச்சிகளை நன்கு வேகவைத்து சமைத்து சாப்பிடலாம்’’ என்றனர்.