October 9, 2017 தண்டோரா குழு
15 நாட்கள் விடுப்பு கொடுக்க முடியாது என கூறியதால் காருண்யா பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தின் மீது ஏறி அந்த பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரீசியன் ஆசாத் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கோவை சிறுவாணி அருகே காருண்யா நிகர்நிலைப்பல்கலைககழகம் செயல்பட்டு வருகிறது.இதில் பொறியியல் மற்றும் மேலாண்மை பாடப்பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பதால்,அடிப்படை தொழிலாளர்கள் 300 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காருண்யா பல்கலைக்கழகத்தில் 7 ஆண்டுகளாக எலெக்ட்ரிசியனாக கேரளாவைச்சேர்ந்த ஆசாத் பணிபுரிந்து வருகிறார். அவர் விடுமுறை எடுக்காமல் வேலை செய்வதால் 15 நாட்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என பொறியாளரிடம் தெரிவித்துள்ளார். 15நாட்கள் விடுப்பு கொடுக்க முடியாது என அவர் கூறியதால் மனமுடைந்த ஆசாத் ஆடிட்டோரியம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும் காருண்யா பல்கலைகழகத்தில் பணிபுரியும் ஒட்டுனர், துப்புரவு பணியாளர்கள், பம்ப் ஆப்ரேட்டர்கள் , எலக்ட்ரிசியன், வர்ணம் பூசுபவர்கள் ஆகிய துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எட்டுமணி நேர வேலை மட்டுமே வழங்க வேண்டும் எனவும், அதிக நேரம் வேலை வாங்கினால் அதற்கான சம்பளத்தை தனியாக தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதே போல் வாரம் தோறும் வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் சம்பளத்தோடு கூடிய விடுப்பு, தேசிய விடுமுறை நாட்களிலும் இதே போல வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரண்டு வருடங்களாக சம்பள உயர்வு வழங்காமல் இருப்பதால்,இரண்டு வருடத்திற்கான ஊதிய உயர்வை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி ஆசாத் சார்ந்திருக்கும் பொது தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்ததையடுத்து அவர் கீழே இறங்கினார்.