October 9, 2017 தண்டோரா குழு
உழவர் பெருமக்கள் பழமர நாற்றுக்களை வாங்கும்போது நாற்றுக்களின் வேர்களில் சிறிய வேர்முடிச்சுகள் உள்ளதா என ஆராய்ந்து பின்னர் நாற்றுக்களை வாங்க வேண்டும், அப்போது தான் நூற்புழுக்களின் தாக்கத்திலிருந்து நாற்றுக்களை காக்க முடியும் என கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நூற்புழுவியல் துறை தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக பழமரச் சாகுபடியாளர்கள் சாகுபடி செய்யும் கொய்யா, மாதுளை, எலுமிச்சைப் பயிர்களில் மறைந்திருந்து தாக்கும் நூற்புழுக்களின் தாக்கம் அதிகாரித்து வருகின்றது.
சாகுபடியாளர்கள் வாங்கும் நாற்றுக்களின் மூலமே நூற்புழுக்கள் உட்புகுகின்றன. எனவே இந்த புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க முன்னெச்சாரிக்கை நடவடிக்கை அவசியமாகும்.
இதற்கான முன்னெச்சாரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதிகாரிகள் கூறுகையில்,
“பழமர நாற்றுக்கள் பெரும்பாலும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தோ அல்லது அண்டை மாநிலங்களில் இருந்தோதான் பெறப்படுகின்றன. பெரும்பாலும் விவசாயிகள் நோரில் சென்று பழமர நாற்றுக்களை வாங்குவதில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். இடைத்தரகர்கள் மூலமாகவோ அல்லது முகவர்கள் மூலமாகவோ தான் இந்த வியாபாரம் நடைபெறுகின்றது.
இதனால் விவசாயி நூற்புழு தாக்கிய நாற்றுக்களை நட்டு அவை சில வருடங்கள் கழித்துப் பொரிய பாதிப்பையும் மகசூல் இழப்பையும் ஏற்படுத்துகின்றது. இது போன்று நடக்கும் போது தான் விவசாயிகள் விழிப்படைகின்றனர்.
இதனை தடுக்க உழவர் பெருமக்கள் நாற்றுக்களை வாங்கும்போது நேரில் சென்று ஓரு நாற்றுக்களைப் பிடுங்கி வேர்களில் சிறிய வேர்முடிச்சுகள் உள்ளதா என ஆராய்ந்து பின்னர் நாற்றுக்களை வாங்கிப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றனர்.