June 14, 2017 தண்டோரா குழு
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் நீர் மாதிரிகள் சேலத்தில் உள்ள ஆய்வு மையத்திற்கு எடுத்து செல்லபட்டு நீரில் கலந்துள்ள மாசு குறித்து கண்டறியப்படும் என மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தகவல்.
பவானி ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் விவகாரம் குறித்து மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்றில் கடந்த திங்கட்கிழமை ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பது கண்டறியபட்டது. பவானி கரையோரம் இயங்கும் துணிகளுக்கு சாயம் ஏற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் இராசயன கழிவு நீர் நேரடியாக எவ்வித சுத்திகரிப்பும் இன்றி ஆற்றில் கலக்கவிபடப்படுவதால் ஆற்று நீர் மாசடைந்து அதில் உள்ள மீன்கள் இறந்துபோனதாக புகார் எழுந்தது.
இங்குள்ள ஆற்று நீரையே குடிநீராக வினியோகம் செய்யபட்டு வருவதால் அச்சமடைந்த மக்கள் பவானி ஆற்று நீர் இரசாயன கலப்பால் விஷமாக வருவதாக தெரிவித்து இது குறித்து மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து புதன்கிழமை காலை கோவையில் இருந்து மாவட்ட மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரி மலையாண்டி தலைமையில் மேட்டுப்பாளையம் வந்திருந்த அதிகாரிகள் குழுவினர் இங்குள்ள பவானி ஆற்றில் மீன்கள் இறந்து கிடந்த கரையோர பகுதியை ஆய்வு செய்ததுடன் நீரில் கலந்துள்ள ஆக்ஸிசன் மற்றும் உப்பின் அளவு குறித்து சோதனை செய்தனர்.
பின்னர் அங்குள்ள ஆற்று நீரின் மாதிரியை மேல் பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். இது குறித்து மாசுகட்டுபாட்டு அதிகாரிகள் கூறுகையில்
“குடிநீராக பயன்படுத்தப்படும் பவானி ஆற்று நீர் மாசடைந்துள்ளதா, இரசாயன கழிவுகள் கலப்பால் பாதிக்கபட்டுள்ளதா, மீன்கள் இறந்ததற்காக காரணம் மற்றும் கரையோர பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலை கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா என பல வகைகளிலும் விசாரணை நடத்தப்படும்.
தற்போது எடுக்கபட்டுள்ள மாதிரிகள் சேலத்தில் உள்ள ஆய்வு மையத்திற்கு எடுத்து செல்லபட்டு நீரில் கலந்துள்ள மாசுக் குறித்து கண்டறியப்படும் இதன் பின்னர் ஆய்வக அறிக்கையின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றனர்.