January 24, 2017 தண்டோரா குழு
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
கேரள அரசு தமிழக எல்லையில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது. தமிழக அரசின் அனுமதி பெறாமல் அத்துமீறிக் கட்டப்படும் இந்த அணைகள் மூலம் 15,000 ஏக்கர் பரப்பில் புதிய பாசனத் திட்டதை உருவாக்க அம்மாநில அரசு முயல்கிறது.
இதனைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கேரள அரசின் இந்த அத்துமீறலைக் கண்டித்து தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு திங்களன்று கடிதம் எழுதியுள்ளார்கள்.
அக்கடிதத்தில், காவிரியின் கிளை நதியாகிய பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டத் திட்டமிட்டிருக்கிறது. தேக்குவட்டை, மஞ்சிகண்டி ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணி தொடங்கிவிட்டது. மேலும், பாடவயலில் கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டு கட்டுமானப் பணி தொடங்கத் தயார் நிலையில் உள்ளது. கேரள அரசின் இந்த செயல் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களும் தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என்பதை நினைவு கூர்ந்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை உடனே நிறுத்த, கேரள அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.