February 17, 2017 தண்டோரா குழு
ஈராக் தலைநகர் பாக்தாதில் வியாழக்கிழமை நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், “தெற்கு பாக்தாதில் பழைய கார் சந்தை உள்ளது. அங்கு குண்டு வெடித்ததில் 45 பேர் உயிரிழந்தனர். இவ்வாண்டில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் இதுவே மிக பெரியது” என்றார்.
இது போன்ற தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஐஎஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அமாக் பிரசார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஷியா இன மக்களை ஒன்று சேர்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
பாக்தாத் நகரின் பாயா என்னும் இடத்தில் வியாழக்கிழமை மாலை 4.15 மணியளவில் இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மக்களின் கருகிய உடல்கள் மற்றும் சேதமடைந்த இடங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.
இராக் நாட்டின் பாதுகாப்பு படை பிரிவான பாக்தாத் ஆபரேஷன் கமாண்ட் (BOC) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பாயாவில் உள்ள கார் விற்பனை நிலையத்திற்கு அருகில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.
உள்துறை அமைச்சக அதிகாரியும், “45 பேர் உயிரிழந்தனர். 6௦ பேர் காயமடைந்தனர்” என்று கூறினார். தாக்குதல் நடந்த இடத்தையும் மக்களையும் சமாளிக்க அவசர சேவை அதிகாரிகள் போராடி வருகின்றனர். இறப்பின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்” என்றார்.
அதே இடத்தில் செவ்வாய்க்கிழமை கார் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். இராக் நாட்டின் தலைநகரின் வட பகுதியில் வியாழக்கிழமை நடந்த மற்றொரு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது.
2௦17ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து பல தற்கொலைக் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இவ்வாரம் வரை நடந்த சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.