January 6, 2017 தண்டோரா குழு
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 218 இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்தது.
இந்திய மீனவர்கள் 439 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் அரசு கைது செய்தது. அவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. முதல் கட்டமாக கடந்த டிசம்பர் 25ம் தேதி பாகிஸ்தானின் மலிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 220 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை மேலும் 218 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. அவர்கள் ரயில் மூலம் லாகூர் அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கிருந்து வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையில், ஒரு மீனவர் மாரடைப்பால் சிறையில் மரணம் அடைந்துவிட்டார் என பாகிஸ்தான் சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
யூரி தாக்குதளுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.