June 8, 2023 தண்டோரா குழு
பாரதியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவுபெற்ற கல்லூரிகளில் ஆராய்ச்சி பட்டம் (பி.எச்.டி) மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (எம்.பில்) சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு 2023 சியட் வரும் 11-ம் தேதி நடக்கிறது. 51 பாடங்களில் நடைபெறவுள்ள இந்த நுழைவுத் தேர்விற்கு 4 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 2 ஆயிரத்து 199 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கண்டறியப்பட்டு உள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தேர்விற்கான நுழைவுச்சீட்டினைப் பாரதியார் பல்கலைக்கழக இணையப்பக்கத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.கோவை, ஊட்டி, ஈரோடு, திருப்பூர்,பொள்ளாச்சி ஆகிய ஐந்து இடங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறகிறது.
கோவை மாவட்டத்தில் பிஷப் அப்பாசாமி கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி, ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் மகளிர் கலை கல்லூரி, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி மற்றும் பெள்ளாச்சியில் என்.ஜி.எம் கல்லூரி ஆகிய 7 கல்லூரிகளில் தேர்வு நடக்கிறது. தேர்வு காலை 11 மணிக்கு துவங்கி மதியம் 12.30 மணிக்கு நிறைவடையும்.
தேர்வாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தேர்வு நுழைவுச்சீட்டில் கொடுக்கப்பட்டு உள்ளது. நுழைவு தேர்விற்கான பணிகளை பொது நுழைவுத் தேர்வு ஒருங்கிணைப்பாளரும், தாவரவியல் துறைத்தலைவருமான பரிமேலழகன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.