April 2, 2022 தண்டோரா குழு
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் சுவர் ஏறி உள்ளே குதித்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு மாணவிகளை தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர்.
மாணவிகள் இது சம்பந்தமாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தையும் நடத்தினர். இது சம்பந்தமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு கல்லூரி வளாகத்திற்கு சென்று மாணவிகளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.
மேலும் பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் இக்குழு சமூக விரோதிகளின் செயல்பாட்டையும், மாணவிகள் படுகின்ற வேதனைகளையும் எடுத்துக் கூறினர். இதன் முழு அறிக்கையை கோவை மாவட்ட பொறுப்பாளர் முருகானந்தத்திடம் இந்த குழு சமர்ப்பித்தது.
இதுகுறித்து பாஜக மாவட்ட பொறுப்பாளர் முருகானந்தம் கூறுகையில்,
‘‘கோவையில் இதுபோன்ற சம்பவங்களால் மாணவ-மாணவிகள் மன ரீதியான துன்பத்திற்கு ஆளாக்கப்படுவதோடு, உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உடனே கைது செய்ய வேண்டும்.இல்லாவிட்டால், பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய போராட்டத்தை பாதிக்கப்பட்ட மாணவிகளோடு சேர்ந்து நடத்தும்’’ என்றார்.