March 27, 2017 தண்டோரா குழு
இத்தாலியில் பாலியல் பலாத்காரத்தின் போது பெண் சத்தம் போடாததால் குற்றவாளியை நீதிபதி ஒருவர் விடுதலை செய்துள்ளார்.
இத்தாலியில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
இத்தாலில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணை அவரது உயர் அதிகாரியான 46 வயது நபர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் இத்தாலி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரில் “தனது உயர் அதிகாரி தன்னை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.அவரது ஆசைக்கு இணங்காவிட்டால் வேலை வழங்கப்படாது என மிரட்டினார்.” என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு இத்தாலியின் டூரின் நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி “பலாத்காரத்தின்போது பாதிக்கப்பட்ட பெண் ஏன் கத்தவில்லை” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அந்த பெண், “ஒருவர் உடலுறவுக்கு அழைக்கும் போது முடியாது என கூறும் வார்த்தையே போதுமானது. என்னை பலாத்காரம் செய்தவர் என்னை விட பலசாலி என்பதால் அவரை என்னால் தடுக்க முடியவில்லை” என்றார்.
இதனை ஏற்காத நீதிபதி, “பலாத்காரத்தின்போது குற்றவாளியிடம் வேண்டாம் என பெண் கூறுவது போதுமான ஆதாரமாக இல்லை. பலாத்காரத்தின் போது நிறுத்துங்கள், வேண்டாம் என்றுதான் அந்த பெண் கூறியுள்ளாரே தவிர, கத்தி கூச்சலிடவில்லை யாரையும் உதவிக்கும் அழைக்கவில்லை” என்றார். அதன் பின் குற்றவாளியை நீதிபதி விடுதலை செய்தார்.
நீதிபதியின் இத்தீர்ப்பு இத்தாலி மட்டுமல்லா உலகில் உள்ள பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.