March 10, 2022 தண்டோரா குழு
ஆந்திராவில் பெண்ணை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய வழக்கில் தலைமறைவான நபருக்கு ஜாமின் பெற முயன்ற தம்பியை போலீசார் சுற்றி வலைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவிற்கு வேலை விஷயமாகச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது அங்குத் தங்கி வேலை பார்த்தபோது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலிப்பதாகக் கூறி திருமணம் செய்து நான்கு மாதங்கள் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென பிரபாகரன் அங்கிருந்து மாயமாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆந்திர மாநில போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ஆந்திர மாநில போலீசார் இதுகுறித்து, கோவை மாநகர காவல் துறையிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரபாகரனை பிடிக்கக் கடந்த 4 நாட்களாக கோவையில் போலீசார் முகாமிட்டு, தேடி வந்த நிலையில், இன்று பிரபாகரனின் தம்பி தாமோதரன் என்பவர் வழக்கறிஞர் மூலம் முன் ஜாமீனுக்கு முயற்சி செய்ய நீதிமன்றத்திற்கு வருவதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து வழக்கறிஞருடன் இருசக்கர வாகனத்தில் தாமோதரன் வந்தபோது, உப்பிலிபாளையம் அருகே அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, பிடிபட்ட தாமோதரனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
போலீசாரிடம் சிக்காமல் முன் ஜாமீனுக்கு முயன்ற போது போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.