June 9, 2017 தண்டோரா குழு
மதுரையில் மக்கள் பயன்படுத்தும் பாலில் கலப்படம் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள உணவுப்பாதுகாப்பு துறை சார்பில் நேற்று தரப்பரிசோதனை நடைபெற்றது. அதில் ஒரு பால் மாதிரியில் அதிக நுரை வருவதற்காக சோப்பு ஆயில் கலக்கப்பட்டது கண்டிபிடிக்கப்பட்டது.
மதுரை அரசுப்பேருந்து பணிமனை எதிரில் நடைபெற்ற இந்த தரப்பரிசோதனை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் நடந்தது. இந்த முகாமில் 1௦௦க்கும் மேற்பட்ட பால் மாதிரிகள் மக்களிடம் இருந்து பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் ஒரு பால் மாதிரியில் அதிக நுரை வருவதற்காக சோப்பு ஆயில் கலக்கப்பட்டது கண்டிபிடிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
“சட்டப்பூர்வமாக உறுதி செய்ய கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு இந்த பாலை அனுப்பஉள்ளோம்.” என்று உணவு பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில்
“மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பரிசோதனை முகாம் நடந்தது.இந்த முகாம் மதுரை மாவட்டத்தின் பிறபகுதிகளும் நடத்தப்படும். இதில் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பாலில் 300 மி.லி அளவுக்கு எடுத்து வந்து கொடுத்து தரப்பரிசோதனை செய்து கொள்ளலாம்.
பாலில் கலப்படம் இருப்பது தெரிய வந்தால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு இதுவரை 48 பால் மாதிரிகள் தரப்பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.” என்றார் அவர்.