November 4, 2022 தண்டோரா குழு
தீவனங்களின் விலை உயர்வால் பால் கொள்முதல் விலையை 10சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ . 32 லிருந்து ரூ .35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41 லிருந்து ரூ.44 ஆக நிர்ணயம் செய்து இரண்டுக்கும், மூன்று ரூபாய் உயர்த்தி நேற்றையதினம் தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாடுகளுக்கு கொடுக்கப்படும் தீவனமான தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனம் உள்ளிட்டவை விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதனால் பாலின் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10சதவீதம் உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் பால் விலை உயர்வு தொடர்பாக முதலமைச்சர் பால் உற்பத்தியாளர்களை அழைத்து பேச வேண்டும் என கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.