July 16, 2022 தண்டோரா குழு
தமிழகத்தில் நடந்த பாஸ்போர்ட் ஊழல் தொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை கெம்பட்டி காலனி பகுதியில் நடமாடும் மக்கள் குறை தீர்க்கும் சேவை வாகனத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் நடந்த பாஸ்போர்ட் ஊழல் தொடர்பாக வருகிற 21ம் தேதி அன்று தமிழக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.இவ்விவகாரத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டது குறித்து, ஆதாரப்பூர்வமாகப் புகார் அளிக்க உள்ளதாகவும், முதலமைச்சர் தேச பாதுகாப்போடு விளையாடாதீர்கள் எனவும், இவ்விவகாரத்தில் இதுவரை ஒரு சார்ஜ் மெமோ கூட கொடுக்கவில்லை என தெரிவித்தார்.
எந்த ஆட்சியில் நடந்து இருந்தாலும் முதலமைச்சர் முன்னுதாரணமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை எனவும், இந்த நிகழ்ச்சிக்குப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பங்கேற்பதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது எனவும் கூறினார். இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மிகப்பிரமாண்டமாக நடத்த வேண்டும் என தெரிவித்தார்.