March 1, 2017 தண்டோரா குழு
குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டதாக மேற்கு வங்க பாஜக மகளிர் அணித் தலைவர் ஜுஹி சௌத்ரியை சி.ஐ.டி. போலீசார் புதன்கிழமை கைது செய்தனர். இந்திய –நேபாள எல்லையில் உள்ள படாசி என்ற இடத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க பா.ஜ.க. கட்சி தலைவர் திலிப் கோஷ் கூறுகையில்,
“சௌத்ரி மீது சுமத்தப்பட்ட குற்றங்களைக் குறித்து கட்சி விசாரிக்கும். அவர் குற்றவாளி என்று நிருபணமானால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
“ஜுஹி சௌத்ரியை விசாரிக்க மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரிக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்வோம். அதன் பிறகு, அந்த மாவட்ட அதிகாரிகளிடம் அவரை ஒப்படைப்போம்” என்று குற்றப் புலனாய்வு துறை (சி.ஐ.டி) அதிகாரி தெரிவித்தார்.
குழந்தைகள் கடத்தப்படுவது குறித்த புகார்களை விசாரித்த சிஐடி போலீசார், தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் சார்ந்த தலைமை தத்தெடுப்பு அதிகாரி சோனாலி மண்டல், அந்த அமைப்பின் தலைவர் சந்தனா சக்கரவர்த்தி, அவருடைய சகோதரர் மானஸ் பௌமிக் ஆகியோரை ஏற்கெனவே கைது செய்துள்ளனர். அதையடுத்து ஜுஹி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வயது முதல் 14 வயது வரையிலான 17 குழந்தைகளை வெளிநாட்டினருக்கு விற்றதாகவும் சந்தேகத்துக்கு இடமான வகையில் தத்து எடுப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டதாகவும் அவர்கள் மேல் வழக்கு பதிவாகியிருந்தது. இதுபோல் 17 குழந்தைகள் கடத்தப்பட்டதாக 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் வடமாவட்டமான பெஹலாவில் பதுரியா என்ற இடத்தில் சில நர்சிங் ஹோம்களில் நடத்திய அதிரடி சோதனைகளில் சிறுவர்கள் கடத்தல் குறித்த சம்பவங்களை சிஐடி போலீசார் கண்டறிந்தனர்.