April 3, 2024 தண்டோரா குழு
பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் பதிவுகள் தென்னிந்திய குறும்பட விழா துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் டி. பிருந்தா தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் டி.கண்ணையன் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிகரம் தொடு, அஞ்சான் ஆகிய படங்களை தயாரித்து வெளியிட்ட சினிமா தயாரிப்பாளர் தனஞ்சயமும்,தூங்கா நகரம்,ஆறாவது சினம் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் கௌரவ் நாராயணனும் பங்கேற்றனர். விழாவையொட்டி,தென்மாநிலங்களில் இருந்து வந்திருந்த 60-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டன. இந்தப் போட்டியில் சிறந்த குறும்படமாக தேர்ந்தெடுக்கப்ட்ட படத்துக்கு ரூ.7000 முதல் பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாவது இடம்பிடித்த குறும்படத்துக்கு ரூ.5000, மூன்றாவது இடம் பிடித்த குறும்படத்துக்கு ரூ. 3000 வழங்கப்பட்டது. இதைத் தவிர, சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், படத் தொகுப்பாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு,தலா ரூ.3000 பரிசாக வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சினிமா தயாரிப்பாளர் தனஞ்சயம் பேசுகையில்,
ஊடகத் துறை மாணவர்களுக்கு இத்தகைய போட்டிகள் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்குகின்றன என்றும், இத்தகைய போட்டி களம் சினிமாத் துறைக்கான நுழைவாயிலாக அமைக்கிறது என்றும் எடு்த்துரைத்தார்.விழாவில் கல்லூரி துணை முதல்வர் ஏ.அங்குராஜ்,விஷுவல் கம்யூனி்கேசன் துறைத் தலைவர் ஜி.ராதா உள்பட 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர்.