March 28, 2017 தண்டோரா குழு
இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 4-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பல கட்டங்களாக 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பா.ஜ.க கட்சி அபார வெற்றியை அடைந்தது. இதையடுத்து உத்தர பிரதேஷம், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாந்த் ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க கட்சி ஆட்சியை அமைத்தது.
இந்திய பிரதமரை அமெரிக்க அதிபர் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் அழைத்து, அவருடைய சமீப வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இது குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், “சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் வாழ்த்தினார்” என்றார்.
முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் ஜனவரி 24-ம் தேதி தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசினர். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு, தொலைபேசி மூலம் அவருடன் பேசிய 5-வது சர்வதேச தலைவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.