April 8, 2023 தண்டோரா குழு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 9ம் தேதி நீலகிரிக்கு வரவுள்ளார். முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை அவர் பார்வையிடவுள்ளார்.பிரதமர் வருகையை முன்னிட்டு முதுமலை பகுதி போலீஸ் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கே வணிக, வர்த்தக கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வந்து செல்லும் வரை கட்டுபாடுகள் நடைமுறையில் இருக்கும்.பிரதமர் வருகையை முன்னிட்டு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சுதாகர், டிஐஜி விஜயகுமார் தலைமையில் 7 எஸ்.பிக்கள் கொண்ட பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடக்கிறது. பிரதமர் பங்கேற்கும் பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அந்த பகுதியில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
செக்போஸ்ட், அடர்ந்த வனப்பகுதி, டிரக்கிங் செல்லும் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணி நடத்தி வருகின்றனர்.பிரதமர் ஹெலிகாப்டர் மூலமாக மைசூரில் இருந்து முதுமலை வரவுள்ளதாக தெரிகிறது. இந்த பகுதியில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், பாதுகாப்பு ஒத்திகை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இருந்து போலீசார் நீலகிரி மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக செல்லவுள்ளனர். பிரதமர் வருகையை முன்னிட்டு முதுமலைப்பகுதியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது.