May 23, 2017 தண்டோரா குழு
ராஜீவ் கொலையில் ஜெயின் கமிஷன் விசாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்ட சாமியார் சந்திராசாமி உடல்நலக்குறைவாவால் டெல்லியில் காலமானார்.
இந்திய பிரதமரான ராஜீவ்காந்தி, கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முருகன்,நளினி, சாந்தன்,பேரறிவாளன் உட்பட எட்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட உள்ளது, இந்திய அரசியல்வாதிகளிடையே செல்வாக்கு பெற்ற சந்திராசாமி என்ற சாமியாருக்கு முன்னரே தெரியும் என சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன், சந்திராசாமியையும் இந்த வழக்கில் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளாக வெளி உலக தொடர்புகள் ஏதுமின்றி வாழ்ந்து வந்த சந்திராசாமி, உடல்நலக்குறைவால் இன்று டெல்லியில் உயிரிழந்தார்.அவருக்கு வயது 66. இவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்மராவிற்கு நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.