May 30, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் குடிப்போதையில் கார் ஓட்டியதாக பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ்சை நேற்று(மே 29) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ்(41). ஒரு காலத்தில் கோல்ப் விளையாட்டில் மன்னனாக திகழ்ந்த்தவர். புளோரிடா மாகணத்தில் உள்ள ஜூபிடர் நகரில் நேற்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கினர்.சோதனையில் உட்ஸ் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பதாக காவல்துறையினரிடம் எழுத்துப்பூர்வமான வாக்குறுதி அளித்தார். இதையடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார்.
உட்ஸ் இது போன்ற சர்ச்சையில் சிக்கிக்கொண்டது இது முதல் முறையல்ல. கடந்த 2௦௦9ம் ஆண்டு, பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்ததால் அவருடைய திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. அதேபோல், அவருடைய தொழில் வாழ்க்கையும் தலைகீழாக மாறியது. இதையடுத்து, ஏப்ரல் மாதத்தில் அவருடைய முதுகில் நடந்த நான்காவது அறுவை சிகிச்சை காரணமாக, விளையாட முடியாத நிலையில் இருந்தார். இந்த சம்பவம் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
மேலும் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற உட்ஸ்,முதுகில் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின், கடந்த 2௦13ம் ஆண்டிற்கு பிறகு நடந்த எந்த ஒரு முக்கிய கோல்ப் போட்டியிலும் அவர் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.