June 5, 2023 தண்டோரா குழு
மல்யுத்த பயிற்சி சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பி யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள் பல நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற மல்யுத்த வீரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் போடவும் முன்வந்தனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பதக்கங்கள் வீசும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு அளித்தும், பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தியும SFI, DYFI, உள்ளிட்ட அமைப்புகள் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர்.இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தியும் அவர்களது அமைப்பின் கொடிகளை ஏந்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.