January 6, 2023 தண்டோரா குழு
கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் முறைகளை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் கற்பிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட “பிரி பிரி” என்னும் விளையாட்டு பெட்டகத்தை ஆட்சியர் சமீரன் வெளியிட மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பேசியதாவது:
கோவை மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் ஓர் அங்கமாக குப்பைகளை தரம் பிரிக்கும் முறைகளை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் கற்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட “பிரி பிரி” என்னும் விளையாட்டு பெட்டகங்களை வழங்கி போட்டி நடத்துவதில் மாநகராட்சி பெருமை கொள்கிறது.
மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 84 மாநகராட்சி பள்ளிகளில் “பிரி பிரி” விளையாட்டு போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் குப்பைகளை நீலம், பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் தொட்டிகளில் குப்பைகளின் தன்மைக்கேற்ப தரம் பிரித்து வழங்குவதை விளையாட்டு முறையில் அறிந்து கொள்வார்கள். குப்பைகளின் தன்மைக்கேற்ப வண்ணத் தொட்டிகளை தேர்ந்தெடுக்கும் குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கோவை மாநகராட்சியில் சுமார் 80 சதவீத இடங்களில் குப்பைகளை தரம் பிரித்து பொதுமக்கள் வழங்குகிறார்கள். குப்பைகளை சாலை மற்றும் தெருக்களில் வீசுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் தூய்மை தூதுவர்களாக இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க தேவையான விழிப்புணர்வுகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் சமீரன் பேசியதாவது:
கோவை மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் ஓர் அங்கமாக குப்பைகளை தரம் பிரிக்கும் முறைகளை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் கற்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட “பிரி பிரி” என்னும் விளையாட்டு பெட்டகங்களை வழங்கி குழந்தைகளுடன் விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். திடக்கழிவு மேலாண்மை தற்போதைய சூழ்நிலையில் சவாலான பணியாக உள்ளது. கோவை மாநகராட்சியில் சுமார் 5.25 லட்சம் குடியிருப்புகள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருகின்றன. நாள்தோறும் சுமார் 1200 டன் குப்பைகள் சேகரமாகிறது.
மாணவர்கள் குட்டி காவலர்களாக இருந்து தங்கள் வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குவதை கண்காணிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை முறையை பள்ளி பருவத்திலேயே அறிந்து அதை பிறரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இந்த சிறப்பான நிகழ்வில் பங்கேற்றுள்ள தன்னார்வலர்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் எனது பாரட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.